வெனிசுவேலா தலைவர் மதுரோவுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன

புதன், நவம்பர் 20, 2013

வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு மதுரோவிற்கு சிறப்பு அதிகாரங்களை அளிப்பதற்கான சட்டமூலத்துக்கு அந்நாட்டின் தேசியப் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.


இதன் படி அடுத்த 12 மாதங்களுக்கு காங்கிரசின் ஆலோசனைகளைப் பெறாமலேயே நிக்கொலாசு மதுரோ ஆட்சி நடத்த முடியும். இச்சட்டமூலத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகையில், நாட்டில் விலைவாசிகள் குறைக்கப்படும் என்றும், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.


நாட்டில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினையை சீர்ப்படுத்துவதே தமது புதிய அதிகாரங்களின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார். ஆனாலும், தனது அதிகாரங்களை எதிர்க்கடசியினருக்கு எதிராக அவர் திருப்பி விடக்கூடும் என அரசியல் விமரிசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


வெனிசுவேலாவில் தற்போது உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களிற்கான பற்றாக்குறை நிலவுகிறது, நாட்டில் மின்வெட்டு அமுலில் உள்ளது. அத்துடன் 54% பணவீக்கமும் காணப்படுகிறது.


வெனிசுவேலாவில் சோசலிசப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் ஒரு கட்டமாக அந்நாட்டில் மோசடி விலை நிர்ணயத்தைத் தடுக்க தனியார் நிறுவனங்கள் பெறும் இலாபத்திற்கு உச்சவரம்பு கொண்டுவருவதாக மதுரோ சென்ற வாரம் அறிவித்திருந்தார். இதனால் தனியார் நிறுவனங்களினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 60% வரை குறைக்கப்பட்டது.


மூலம் தொகு