விக்கிலீக்சிற்கு ஆவணங்களைக் கசிந்த சிப்பாய் சித்திரவதைக்கு உள்ளாவதாகக் குற்றச்சாட்டு
ஞாயிறு, திசம்பர் 26, 2010
- 22 ஆகத்து 2013: விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- 4 சூன் 2013: விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க்
- 17 ஆகத்து 2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது
- 23 திசம்பர் 2011: பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்
- 23 திசம்பர் 2011: விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை
ஐக்கிய அமெரிக்கச் சிப்பாய் பிராட்லி மானிங் என்பவரைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தனது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 250,000 இற்கும் அதிகமான அமெரிக்கத் தூதரக ஆவணங்களை விக்கிலீக்ஸ் என்ற செய்திக்கசிவு இணையத்தளத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மானிங் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டார்.
மானிங்கின் ஆதரவாளர்கள் சிலர் ஜெனீவாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையரிடம் கடந்த வாரம் இது குறித்து முறையிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மானிங் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடம் மற்றும் அங்கு அவர் நடத்தப்படும் முறை "சித்திரவதை" என்றே கருதப்பட வேண்டும் என அவர்கள் முறையிட்டுள்ளனர். சலோன்.கொம் என்ற தளத்தின்படி, கைது செய்யப்பட்ட நாளில் இருந்து உடற்பயிற்சி நிராகரிக்கப்பட்டமை, உறங்குவதற்கான அடிப்படை வசதி மறுக்கப்பட்டமை, ஒரு நாளுக்கு 23 மணித்தியாலங்கள் தனிமைச் சிறைவைப்பு போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் மேஜரும், ஈராக் போரில் பெரும் பங்காற்றியவருமான மானிங் ஒரு சிறிய அறைக்குள் நடப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் டேவிட் கூம்ஸ் தெரிவித்தார்.
"மானிங் ஒரு வெற்று அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு நடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார், பொதுவாக எட்டடி நடப்பதற்கே அவ்வறைக்கு இடமுள்ளது. நடப்பதற்கு அவருக்கு மனமில்லை என அவர் தெரிவித்தால் உடனடியாக அவர் தனது சிறைக்கூடத்துக்கு கூட்டிச்செல்லப்படுகிறார்," என கூம்ஸ் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பென்டகன் அதிகாரிகள் மானிங் "நல்ல முறையில்" நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மூலம்
தொகு- U.N. to investigate treatment of Bradley Manning, சலோன், டிசம்பர் 23, 2010
- U.S. Military Assures U.N. WikiLeaks Suspect Treated 'Fairly', ஃபொக்சு நியூஸ், டிசம்பர் 22, 2010
- UN looking into WikiLeaks suspect's treatment, வாசிங்டன் போஸ்ட், டிசம்பர் 22, 2010