விக்கிப்பீடியாவின் மூன்று நாள் மாநாடு மும்பையில் ஆரம்பம்

சனி, நவம்பர் 19, 2011

இந்திய விக்கிப்பீடியாவின் முதலாவது மாநாடு மும்பையில் நேற்று ஆரம்பமானது. நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கு கொள்கின்றனர். விக்கிப்பீடியா தகவல் கலைக்களஞ்சியத்தை இந்திய உபகண்டத்தில் விரிவாக்கும் திட்டத்துடன் இந்த மூன்று நாள் மாநாடு ஆரம்பித்துள்ளது.


Wiki Conference India logo (with dates).png
மும்பை மாநாட்டில் ஜிம்மி வேல்ஸ் உரை

இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவர்கள் மூலம் விக்கிப்பீடியா தனது உள்ளூர் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளை அதிகரிக்கச் செய்ய விக்கிமீடியா நிறுவனம் எண்ணியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற எந்த விக்கி மாநாடுகளிலும் இவ்வளவு பெருந்தொகையானோர் கலந்து கொள்ளவில்லை என அந்நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.


மும்பை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 700 "விக்கிமீடியர்கள்" வரையில் கலந்து கொள்கின்றனர்.


"இந்தியா பெருந்தொகையான அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ரிக்வேதம் முதல் பகவத் கீதை வரை, உயிரித் தொழிநுட்பம் வரை அறிவாளர்கள் உள்ளனர். எனவே விக்கிப்பீடியா போன்ற தளங்களில் இந்தியர்கள் தமது அறிவை வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்," என இந்திய விக்கிமீடியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


விக்கிமீடியா மாநாடு நடைபெறும் பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே சிறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தியாவின் வரைபடம் ஒன்று தவறான தகவல்களுடன் சட்டவிரோத எல்லைகளைக் கொண்டு வரையப்பட்டு விக்கிமீடியாவில் காட்சிப்படுத்தப்பட்டதை எதிர்த்து சிறு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த விக்கிமீடியா நிறுவனத்தின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "இம்மாதிரியான தலைப்புகளில் விக்கிப்பீடியா நடுநிலையாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்தியாவின் சரியான வரைபடம் எதுவென்று தீர்மானிப்பது நாங்களல்ல, ஆனால் இவ்வாறான பிரச்சினை இருப்பது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம்," எனக் கூறினார்.


மூலம்தொகு