வவுனியாவில் கண்ணிவெடி விபத்தில் பிரெஞ்சு நிபுணர் உயிரிழப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

செவ்வாய், மே 11, 2010

இலங்கையின் வடக்கில், வவுனியா, மன்னார் எல்லைப்புறப் பகுதியான இரணை இலுப்பைக்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு நாட்டு நிபுணர் ஒருவர் ராக்கெட்டினால் உந்தப்படும் கைக்குண்டொன்றினை செயலிழக்கச் செய்ய முயல்கையில் எதிர்பாராத விதமாக வெடித்ததில் படுகாயமுற்று சிகிச்சை பின் உயிரிழந்தார்.


விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட ஜொனி மிதிவெடி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எப்.எஸ்.டி. என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இலங்கையில் ஈழப்போரின் போது புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இப்பணியில் இந்தியாவைச் சேர்ந்த வேறு இரண்டு நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு நிறுவனங்களும், இலங்கை இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.


பிரான்ஸ் நாட்டவரான் மமோ என்று அழைக்கபடும் 55 வயதுடைய டொமினிக் மொரின் என்பவரே உயிரிழந்துள்ளதாக எஃப்.எஸ்.டி நிறுவனத்தின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எஸ். தியாகேந்திரன் தெரிவித்தார்.


இவ்விபத்தை அடுத்து எப். எஸ். டி. நிறுவனத்தின் மருத்துவக் குழுவினர் அம்புலன்ஸ் வண்டியில் விரைந்த போது வண்டி விபத்துக்குள்ளானதில் சாரதியும், மருத்துவ குழு உறுப்பினர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் படுகாயமடைந்த பிரெஞ்சு நிபுணர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்காமல உயிரிழந்துள்ளார்.


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து ஓராண்டு பூர்த்தியடைகின்ற நிலையில் கண்ணிவெடி விபத்தொன்றில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு