வடக்கு ஆத்திரேலிய நகரை நோக்கிப் பெருமளவு வௌவால்கள் படையெடுப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், மார்ச்சு 7, 2012

வடக்கு ஆத்திரேலிய நகரம் ஒன்றை நோக்கி 250,000 இற்கும் அதிகமான வௌவால்கள் படையெடுத்திருப்பதால் அங்கு வெறிவிலங்குக் கடியுடன் சம்பந்தமான நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


தொங்கும் பறக்கும் நரிகள்

வடக்கு ஆத்திரேலியத் தலைநகர் டார்வினில் இருந்து 300 கிமீ தெற்கே கேத்தரீன் என்ற நகரிலேயே இந்த பழ வௌவால்கள் ஊடுருவியுள்ளன. ஆத்திரேலிய வௌவால் லீசாக்காய்ச்சல் (Australian Bat Lyssavirus) எனப்படும் நச்சுக் காய்ச்சல் இவற்றின் மூலம் பரவும் ஆபத்து உள்ளதாக நோய்த்தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இந்தப் பழ வௌவால்கள் மனிதர்களைக் கடிக்கும் போதோ அல்லது உராய்ஞ்சும் போதோ இந்த நோய் மனிதரில் பரவும்.


இந்நகரில் உள்ள முக்கிய விளையாட்டு மைதானம் ஒன்றை உள்ளூர் அதிகாரிகள் மூடியுள்ளனர்.


சிவப்பு பறக்கும் நரி என அழைக்கப்படும் இந்தப் பழ வௌவால்கள் கடந்த மாதம் இந்நகரை நோக்கிப் படையெடுத்தன. கடந்த சில நாட்களாக இவற்றின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையானவை அங்கு காணப்படுகின்றன. காலநிலை மாற்றங்களினாலும், வாழ்விடங்கள் அழிக்கப்படுவதனாலும், இவை இங்கு வந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


"பழவகைகளும், பூக்களும் இந்நகரில் ஆண்டு தோறும் நிறைய விளைகின்றன. எனவே இவற்றைத் தேடியே இவை இங்கு வருகின்றன," என ஜோன் பர்க் என்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வௌவால்களால் தாக்கப்பட்டவர்கள் அரிதாக உயிரிழக்கக்கூடும். ஆனாலும், இந்நோயிற்கு எதிராகத் தடுப்பூசிகள் உள்ளன.


இந்தப் பறக்கும் நரிகள் பத்தாண்டுகளுக்கு ஓரிரு தடவைகளே இவ்வாறு பெருமளவில் இந்நகரை நோக்கிப் படையெடுக்கின்றன என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

தொகு