லிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூன் 23, 2011

லிபியா தலைவர் முஆம்மர் கடாபியின் அரசின் செயல்களை அடக்குவதற்காக, அரசு துறை நிறுவனம் உட்பட, ஒன்பது நிறுவனங்கள் மீது, ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.


லிபியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அராப் துருக்கிய வங்கி, வட ஆப்பிரிக்க சர்வதேச வங்கி, வட ஆப்பிரிக்க வர்த்தக வங்கி ஆகிய 3 வெளிநாட்டு வங்கிகள் மீதும், மேலும் ஆறு நிறுவனங்கள் மீதும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாக்கித்தானைச் சேர்ந்த பாக்-லிபியா ஹோல்டிங் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் லிபியாவின் பங்கு 50 சதவீதமும், பாகிஸ்தானின் பங்கு 50 சதவீதமும் உள்ளது.


அமெரிக்கத் தடையால் லிபியா அரசுக்குச் சொந்தமான கானா- லிபியா அராப் கோல்டிங் நிறுவனம், கிளாக்கோ ஹோட்டல்ஸ், நார்வேயன் ரசாயன நிறுவனம், லிபியன்- நார்வே உர நிறுவனம் ஆகியவற்றுடன் இனிமேல் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் நிறுவனங்கள் நலிவடைந்து மூடவேண்டிய நிலை உருவாகும்.


இதுபற்றி அமெரிக்க நிதித்துறை கூறுகையில், "லிபியாவில் மட்டுமின்றி, உலகளவில் லிபியாவுக்கு சொந்தமான நிறுவனங்கள், இந்த பொருளாதார தடையை மீறி, அந்நாட்டிற்கு உதவி செய்வது குறித்து அமெரிக்க நிதித்துறை கண்காணிப்பு மேற்கொள்ளும். சர்வதேச நிதி உதவியில் இருந்து, கடாபியை தனிமைப்படுத்த தொடர்ந்து விழிப்புடன் செயல்படுவோம். அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் தொழில் தொடர்புகள் வைத்துக் கொள்ளவும் இந்த தடை செல்லும். லிபியாவின் முன்னாள் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மீதான தடையை அமெரிக்கா நீக்கிக் கொள்கிறது." என தெரிவித்துள்ளது.


லிபியத் தலைவர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.


மூலம்

தொகு