லிபியாவில் விமான விபத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், மே 12, 2010

தென்னாப்பிரிக்காவில் இருந்து பயணித்த பயணிகள் விமானம் ஒன்று லிபியாவின் தலைநகர் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வீழ்ந்து நொறுங்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.


லிபியா

விமானத்தில் பயணித்த 93 பயணிகளில் பெரும்பான்மையானோர் டச்சுப் பிரசைகள் ஆவர். மேலும் பிரித்தானியா, மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.


உயிர் தப்பிய டச்சுச் சிறுவன் சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக லிபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது சிடான் தெரிவித்தார்.


ஆப்பிரிக்கியா ஏர்வேய்ஸ் (Afriqiyah Airways) நிறுவனம் தனது இணையத்தளத்தில் பின்வருமாறு அறிவித்திருந்தது: "ஜொகான்னஸ்பேர்க்கில் இருந்து புறப்பட்ட 8யூ771 விமானம் உள்ளூர் நேரப்படி இன்று மே 12 புதன்கிழமை அதிகாலை 06:00 (04:00 UTC) மணிக்கு திரிப்போலி பன்னாட்டு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.”


விமான்ச் சிப்பந்திகள் 11 பேர்ம் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் சேதமுற்ர பகுதிகளை லிபிய அரசுத் தொலைக்காட்சி இன்று காண்பித்தது. காவல்துறையினரும், மீட்புப் பணியாளர்களும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஓடுபாதைக்கு மிக அருகாமையிலேயே இவ்விபத்து இடம்பெற்றது.


"விமானம் தரையிறங்குகையில் வெடித்துச் சிதறியது," என லிபியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தியாளருக்குத் தெரிவித்தார்.


பயங்கரவாதம் காரணமல்ல என அமைச்சர் சிடான் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.


கடந்த இரு நாட்களாக காலநிலை மிகவும் சீராகவே இருந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.


ஆப்பிரிக்கியா ஏர்வேஸ் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு குறைந்த-செலவு விமான நிறுவனம் ஆகும். முக்கியமாக ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இது சேவையாற்றுகின்றது.

மூலம்

தொகு