லிபியாவில் பிபிசி குழுவினர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், மார்ச்சு 10, 2011

லிபியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் பிபிசி தொலைக்காட்சிக் குழுவினர் மூன்று பேரை அந்நாட்டு இராணுவத்தினர் கைது செய்து துன்புறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


சித்திரவதைக்குள்ளான கிரிஸ் காப் ஸ்மித், கோக்தே கொரால்தான், மற்றும் பெராசு கிலானி ஆகியோர் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளனர். இதில் பெராசு கிலானி பாலத்தீனத்தைச் சேர்ந்த அகதியாவார். பிபிசியில் நிருபரான இவரை தனியாக அழைத்துச் சென்று காலணி அணிந்த காலால் உதைந்தும் பிளாஸ்டிக் குழாயினால் முதுகில் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர் தான் நிருபர் என்று சொல்லியும் கேட்கவில்லை. அவர் முன்பு ஒலிபரப்பிய செய்திகளை அந்த இராணுவ அதிகாரிகள் ஏற்கெனவே கண்டிருப்பதாகவும் அதனால் அவரின் செவ்வியில் கோபம் கொண்டிருந்ததாகவும் பெராசு தெரிவிக்கிறார். மேலும் பாலஸ்தீனர்கள் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லியதாகவும் தெரிவிக்கிறார்.


ஜாவியா எனும் நகரின் தெற்கே அமைந்துள்ள அல் அல்ஜகுரா எனும் ஊரில் உள்ள தடை முகாம் ஒன்றில் வைத்து கைது செய்து அழைத்து சென்றிருக்கிறார்கள். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் 21 மணித்தியாலங்கள் இந்தச் சித்திரவதை நிகழ்திருக்கிறது. இதுபோன்று மேலும் பலர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இறுதியில் சுமார் 20 நபர்களை வாகனம் ஒன்றில் அடைத்து ஜாவியாவில் உள்ள வெளிநாடு உளவுத்துறை அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏராளமானோர் கைகள் கட்டப்பட்டு அழுதவண்ணம் இருந்திருக்கின்றனர். பின்னர் ஒவ்வொருவராக சுவற்றின் பக்கம் நிற்கவைத்து கழுத்துக்கருகில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கின்றனர். இராணுவ வீரர் ஒருவர், பிபிசி செய்தியாளர் கிரிஸ் காதுக்கருகில் வைத்து துப்பாக்கியால் ஒருமுறை சுட்டும் இருந்திருக்கிறான்.


இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


மூலம்

தொகு