லிபியாவின் கிழக்குப் பகுதியில் சுயாட்சி அறிவிப்பு

புதன், மார்ச்சு 7, 2012

லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள உள்ளூர்த் தலைவர்கள் எண்ணெய் வளம் மிக்க தமது பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்கக் கோரியுள்ளனர். பெங்காசி நகரில் இடம்பெற்ற சைரெனைக்கா மக்கள் காங்கிரசின் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.


சைரெனைக்கா என அழைக்கப்படும் இப்பிராந்தியம் லிபியாவின் முன்னைய அரசால் பல்லாண்டு காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், இக்கோரிக்கையை அடுத்து தலைநகர் திரிப்பொலியில் லிபிய தேசிய இடைக்கால அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய அரபு நாடுகள் நாட்டில் பிரிவினையைக் கிளறி பிரச்சினைகளை உருவாக்குவதாக இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் குற்றம் சாட்டியுள்ளார்.


லிபியாவின் மூன்று பெரும் பிராந்தியங்கள் (1963 இற்கு முன்னர்)

சுயாட்சி கோருபவர்கள் அப்பிராந்தியத்தில் பெரும்பான்மையைப் பிரதிபலிக்கவில்லை என இடைக்கால அரசின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், பெங்காசி நகரில் பெரும்பான்மை மக்கள் சுயாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


தமக்கு தனியே ஒரு நாடாளுமன்றம், காவல்துறை அதிகாரம், நீதிமன்றம், தலைநகர் பெங்காசி போன்றவற்றை அவர்கள் கோரினர். வெளியுறவுத்துறை திரிப்பொலியில் இருக்கலாம் என அவர்கள் கூறினர். கடாபியின் ஆட்சியில் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டிருந்த அகமது அல்-சுபைர் என்பவர் ஆளும் கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இப்பிராந்திய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும், அதே நேரம் லிபியாவைத் துண்டாட நாம் அனுமதியோம், அது ஒரு நாடாகவே இருக்கும் என அகமது அல்-சுபைர் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.


வரலாற்றின் படி, லிபியா மூன்று பிராந்தியங்களாகப் பிரிந்திருந்தன. சைரெனைக்கா அவற்றில் ஒன்றாகும். ஏனையவை வடமேற்கே திரிப்பொலித்தானியா, மற்றும் தென் மேற்கே ஃபெசான் ஆகியவையாகும். மத்தியக் கரையோர நகரமான சேர் முதல் கிழக்கே லிபிய-எகிப்திய எல்லை வரையில் சைரெனைக்கா நீண்டிருப்பதாக அவதன் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது நாட்டின் எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பகுதியாகும்.


1951 இல் லிபியா விடுதலை அடைந்த பின்னர் இந்த மூன்று மாநிலங்களும் நடுவண் அரசின் கீழ் தனித்தனி மாநிலங்களாக நிருவகிக்கப்பட்டன. 1963 இல் இவை மூன்றும் ஒன்றாக்கப்பட்டன. சைரெனைக்காவின் மக்கள் பார்க்கா என அழைக்கப்படுகின்றனர்.


மூலம் தொகு