ருவாண்டாவில் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்

வெள்ளி, சூன் 25, 2010


ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் தனியார் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் அவரது வீட்டின் முன்னால் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.


உமுவுஜிசி என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஜீன் ருகம்பாகே என்பவரை வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இவர் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இத்தாகுதலை நடத்தியது யாரெனத் தமக்குத் தெரியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இக்கொலைக்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். இப்பத்திரிகை வெளியீட்டுக்கு அண்மையில் அரசாங்கம் தடை வித்தித்திருந்தது. இதனை அடுத்து இது இணையத்தில் வெளிவர ஆரம்பித்தது. பத்திரிகை தடை செய்யப்பட்டதை அடுத்து அதன் பிரதம ஆசிரியர் ஜீன் கசசீரா கடந்த ஏப்ரல் மாதத்தில் உகாண்டாவிற்குத் தப்பி ஓடியிருந்தார். வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.


முன்னாள் இராணுவத் தலைவர் ஃபோஸ்டின் கயூம்பா நயாம்வாசா என்பவரை தென்னாப்பிரிக்காவில் வைத்து கடந்த வாரம் கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இப்பத்திரிகையின் இணையத்ததளத்தில் கட்டுரை ஒன்று வெளியானதே இக்கொலைக்குக் காரணம் என கசசீரா தெரிவித்தார். இப்படுகொலை முயற்சியில் தாமது பங்களிப்பு இல்லையென ருவாண்டா அரசு தெரிவித்திருந்தது.


ஜெனரல் நயாம்வாசா நாடுகடந்த நிலையில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.


ருவாண்டாவில் ஆட்சித்தலைவர் தேர்தல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற விருக்கிறது. 1994 இனப்படுகொலைகளின் பின்னர் நடைபெறவிருக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.

மூலம்

தொகு