போல் ககாமெ ருவாண்டாவின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவானார்

வியாழன், ஆகத்து 12, 2010

1994 இனப்படுகொலைகளுக்குப் பின்னர் ருவாண்டாவில் நடந்த இரண்டாவது அரசுத் தலைவர் தேர்தலில் போல் ககாமெ மீண்டும் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


போல் ககாமெ

புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளில் ககாமெ 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சமூக மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஜீன் ந்தவுகுரிர்யாயோ என்பவர் 5.2 வீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.


”தேர்தல் நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதில் நான் திருப்தி அடைகிறேன்,” என தேர்தல் உயர் அதிகாரி சார்ல்ஸ் முனியானிசா தெரிவித்தார்.


ஆனாலும் எதிர்க்கட்சிகளின் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கவில்லை என பொதுநலவாய கூட்டு நாடுகளின் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். மூன்று எதிர்க்கட்சி வேட்பாளர்களும் ககாமெயின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


"பல எதிர்க்கட்சிகள் போட்டியிட அறிவித்திருந்தும், பல நடைமுறைச் சிக்கல்களினால் அவர்களால் தேர்தலில் நிற்க முடியவில்லை," என அவதானிகள் தெரிவித்தனர்.


52 வயதான போல் ககாமெ 1994 இனப்படுகொலைகளுக்குப் பின்னர் நாட்டின் அரசுத் தலைவரானார். 2003 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் 95 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

மூலம்

தொகு