ருவாண்டாவின் முன்னாள் தலைவரின் படுகொலைக்கு ககாமே காரணமல்ல, அறிக்கை தெரிவிப்பு

வெள்ளி, சனவரி 13, 2012

1994 ஆம் ஆண்டில் ருவாண்டாவின் அரசுத்தலைவர் ஜுவெனல் அபியாரிமானாவின் படுகொலைக்கு தற்போதைய அரசுத்தலைவர் பவுல் ககாமே காரணம் இல்லை என விசாரணைக் குழு அறிக்கை தெரிவித்துள்ளது.


பிரெஞ்சு நிபுணர் குழு ஒன்று இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டது. தாக்குதல் நடந்த பகுதிக்குச் சென்று, அபியாரிமானா சென்ற விமானத்தைத் தாக்கிய ஏவுகணை எந்த இடத்திலிருந்து ஏவப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் இந்த முடிவைத் தெரிவித்துள்ளனர்.


1994ம் ஆண்டு ருவாண்டாவில் துட்சி, மற்றும் ஊட்டு இனத்தவர்களுக்கிடையே நடந்த இனப்படுகொலைத் தாக்குதல்களைத் தூண்டிவிட்ட முக்கிய நிகழ்வாக இப்படுகொலை கருதப்படுகிறது. இப்படுகொலை குறித்து முன்னர் ஆராய்ந்த வேறொரு பிரெஞ்சுக் குழு ககாமே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், ஊட்டு இனத் தீவிரவாதிகளே அபியாரிமானாவின் கொலைக்குக் காரணம் என ககாமே ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


"அபியாரிமானா சென்றுகொண்டிருந்த விமானம் தலைநகர் கிகாலியில் தரையிறங்க வந்த நேரத்தில் அதனைத் தாக்கிய ஏவுகணை, அந்த விமானத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலான இடத்திலிருந்துதான் ஏவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்தப் பகுதி ஊட்டு இனத்தார் ஆதிக்கம் செலுத்திவந்த ருவாண்டா ராணுவத்தின் வசம்தான் இருந்தது. ககாமேவுக்கு விசுவாசமான துட்சி கிளர்ச்சிப் படைகள் இந்த இடத்தில் செயல்பட்டிருக்க வாய்ப்பு இல்லை" எனப் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி விமானத்தின் மீது நடந்த தாக்குதலில் அபியாரிமானாவும், புருண்டி தலைவரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து துட்சி இனத்தவர்களும், ஊட்டு இனத்தவர்களும் இடையே நடந்த இனவெறித் தாக்குதல்களில் எட்டு லட்சம் பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டனர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. கோரமாகக் கொல்லப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களுக்கு இத்தலைவர்களின் கொலை தூண்டுதலாக அமைந்திருந்தது. ககாமே தலைமையிலான துட்சி கிளர்ச்சிக் குழுக்கள் தலைநகர் கிகாலியைக் கைப்பற்றியதன் பின்னர்தான் இந்தக் கொலைகள் முடிவுக்கு வந்தன.


ருவாண்டாவில் நெடுங்காலமாக இனமோதல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக பெல்ஜியக் குடியேற்ற ஆட்சியின் போது சிறுபான்மையின தூத்சி இனத்தவர்கள் பெரும்பான்மையின ஊட்டு இனத்தவரை விட சிறந்த படிப்பறிவையும், அதிக வேலைவாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டனர்.


1962 இல் பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றபின்னர் பல்லாயிரக்கணக்கான தூத்சி இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள உகாண்டாவில் குடியேறி 1990 ஆம் ஆண்டில் ருவாண்டாவில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தனர். 1993 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்பாடு அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுத்திருந்தாலும், இனமோதல்கள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளன.


தொடர்புள்ள செய்தி

தொகு

மூலம்

தொகு