ராஜீவ் கொலை வழக்கு: செப். 9 இல் தூக்கிலிட உத்தரவு வந்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஆகத்து 26, 2011

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ள நிலையில் அவர்களின் தூக்குத்தண்டனை வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தெரிவித்துள்ளார்.


20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இம்முடிவு குறித்து தமிழக சிறைத்துறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறுகையில், "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதியின் உத்தரவு நகல் சிறைத்துறை டிஐஜி நேரடியாக வேலூர் மத்திய சிறைக்கு கொண்டுவந்து கொடுத்துள்ளார். கருணைமனு நிராகரிக்கப்பட்ட தகவல் 3 பேருக்கும் தெரிவிக்கப்பட்டு, நகலும் அளிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 7 வேலைநாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி ஆகிய விடுமுறை நாட்களை கழித்தால் 8ம் தேதி வரை 7 அரசு வேலைநாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த அவகாசம் முடிந்த பிறகு வருகிற 9ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்," எனக் கூறினார்.


ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார்.


ராஜீவ் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதி மத்திய மாநில அரசுகளைின்று அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார். மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் கருணை நடவடிக்கை மேற்கொண்டு, மூவரின் வாழ்க்கையையும் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் சோனியா விரைந்து முன்வந்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு