யாழ் குடாநாட்டில் கடத்தல்கள், கொலைகள் தொடருகின்றன
ஞாயிறு, சனவரி 2, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் யாழ் குடாநாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல், மற்றும் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களினால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
குடத்தனையில் நேற்று முன்தினம் இரவு இளம் குடும்பத்தர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துள்ளார். பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தவராஜா கேதீஸ்வரன் என்னும் 27 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ஒன்பது மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடியணிந்த இனந்தெரியாத நபர்களே வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். தடுக்க முயன்ற மனைவியையும் எச்சரித்த இவர்கள் கேதீஸ்வரனின் தலையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலை உரும்பிராய் மூன்றுகோவில் பகுதியில் வைத்து காலை விக்னேஸ்வரன் என்பவர் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், தனது கணவர் வழமைபோல் காலை தனியார் வகுப்பிற்காக 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும், அதற்குப்பின்னர் எந்தவிதமான தகவல்களும் தமக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
தனிமையில் வாழ்ந்து வந்த தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் ஊர்காவற்றுறை தம்பாட்டிமனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இனம்தெரியாத சிலர் இவர்களின் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் இவர்களை வெட்டியதாக ஊர்காவற்றுறைக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, வடமராட்சி அல்வாய் என்ற இடத்தில் வீட்டோடு கடைவைத்து வியாபாரம் செய்து வந்த 48 வயது விதவைப் பெண் புஸ்பாதேவி யோகநாதன் என்பவர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆயுதபாணிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆறு பிள்ளைகளின் தாயராகிய இவரைத் தேடிவந்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் கொண்ட ஆயுதந்தாங்கிய குழுவினரே வான் ஒன்றில் இவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கொலைகள் என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளனர்.
நேற்று காலை 5.30 அளவில் மாணவனான கஜீவன் பவனீதரன், பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வரும் போது கிளிநொச்சி நகரில் வைத்து பச்சை நிறை ஆடை அணிந்தவர்களால், பேருந்து ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டார். ஏ 9 வீதியின் ஊடாக அவரை கடத்திச்செல்லும் போது பவனீதரன் தமது கையடக்க தொலைபேசியின் மூலம் தாம் கடத்திச்செல்லப்படுவதை தமது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் அவரும் அவருடன் கடத்திச்செல்லப்பட்ட ஏனைய நான்கு பேரும் வவுனியாவில் வைத்து காப்பாற்றப்பட்டனர்.
பல இடங்களிலும் இரவு வேளைகளில் கொள்ளைகள் இடம்பெற்று வருவதுடன் கடந்த மூன்றுவார காலப்பகுதியில் இந்துமதக் குருக்கள் ஒருவர், கல்வித்துறை அதிகாரி, ஒரு வியாபாரி, அஞ்சல் பணியாளர் என நால்வர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொலைகள் யாரால் என்ன காரணத்திற்காக ஏன் செய்யப்படுகின்றது என தெரியாமல் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்ளாள் ஆணையாளராகிய சி.வி.கே.சிவஞானம் கூறுகின்றார்.
மூலம்
தொகு- யாழ்ப்பானத்தில் பெண் கடத்தப்பட்டதாகப் புகார், தமிழ்மிரர், டிசம்பர் 31, 2010
- கடத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான கணவனை மீட்டுத் தாருங்கள் மனைவி மன்றாட்டம், தினக்குரல், சனவரி 1, 2011
- குடத்தனையில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலி, தினக்குரல், சனவரி 1, 2011
- கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட தாயும் மகளும் படுகாயமடைந்தனர், தினக்குரல், சனவரி 1, 2011
- யாழ் குடாவில் வன்முறைகள், பிபிசி, சனவரி 1, 2011
- வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது, தமிழ்வின், சனவரி 2, 2011