மொரோக்கோ மன்னரின் அரசியல் சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றனர்

ஞாயிறு, சூலை 3, 2011

மொரோக்கோவில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிகளை அடுத்து அந்நாட்டு மன்னர் ஆறாம் முகம்மது அறிவித்த அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாக வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


நேற்று முன்தினம் சூலை 1 இல் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 98.5% விழுக்காட்டினர் மன்னரின் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டுள்ளதாக உட்துறை அமைச்சர் டாயிப் செர்க்கோலி தெரிவித்தார்.


இச்சீர்திருத்தங்களை அடுத்து பிரதமருக்கு நிருவாக அதிகாரம் வழங்கப்பட விருக்கிறது. ஆனாலும், இராணுவம், சமயம் மற்றும் நீதி ஆகிய துறைகளை மன்னரே வைத்திருப்பார்.


மத்திய கிழக்கு, மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அண்மைக்காலங்களில் இடம்பெற்று வரும் மன்னராட்சிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் மொரோக்கோ மன்னர் நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார்.


மன்னரின் 12 ஆண்டுகால ஆட்சியில் முதன் முதலாக இடம்பெற்ற இவ்வாக்கெடுப்பில் 73 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர். இது ஒரு "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்" என மன்னர் கூறினார்.


நாட்டின் அனைத்துக் கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

 

மூலம் தொகு