மைக்கல் ஜாக்சனின் இறப்புக்குக் காரணமான மருத்துவருக்கு 4 ஆண்டு சிறை

வியாழன், திசம்பர் 1, 2011

பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் மரணம் தொடர்பான வழக்கில் அவரது தனிப்பட்ட மருத்துவர் கொன்ராட் மறீ என்பவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6 வாரங்களுக்கு மேலாக நடந்த வழக்கில் மைக்கல் ஜாக்சனின் பிரத்தியேக மருத்துவர் மறீ குற்றவாளி என அண்மையில் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.


நியூயார்க் கவுன்டி சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் அதன் பின் தேசியச் சிறையில், இரண்டு ஆண்டுக் காலமும் இவர் தனது தண்டனையைக் கழிக்க வேண்டும்.


"வழக்கின் ஆதாரங்கள் மறீயிற்குப் பாதகமாகவே அமைந்துள்ளன. அவர் தனது பொறுப்பில் இருந்து தவறியுள்ளார். இன்னுமொரு மனிதரின் இறப்புக்குப் பொறுப்புக் கூறவேண்டியவராக இருக்கின்றார். அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்து ஜாக்சனின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததற்காக அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மீது ஜாக்சன் வைத்திருந்த நம்பிக்கைக்கு பாதகமாக அவர் நடந்து கொண்டார்," என நீதிபதி மைக்கல் பொஸ்டர் தனது தீர்ப்பின்போது என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.


மேலும் ஜக்சனின் குடும்பத்தினருக்கு மருத்துவர் நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நட்டஈட்டுத் தொகை 2012 ஆம் ஆண்டு சனவரியில் நீதிபதிகள் குழாம் கூடித் தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டது.


உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மைக்கேல் ஜாக்சன் 2009 சூன் 25-ல் மரணமடைந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்பட்டாலும், அவரது திடீர் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடைசி நேரத்தில் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மறீ மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக, "ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு