மாவோயிசவாதிகளின் நெருக்கடியை அடுத்து நேபாளப் பிரதமர் பதவி விலகினார்

வெள்ளி, சூலை 2, 2010

நேபாளப் பிரதமர் மாதவ் குமார் நேபாள் புதன்கிழமை அன்று தொலைக்காட்சியில் தோன்றி தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


மாதவ் குமார் நேபாள்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் தாம் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரு. நேபாள் தெரிவித்தார்.


திரு, நேபாள் பதவியில் விலகுவதற்கு கடந்த சில மாதங்களாக மாவோயிசவாதிகளால் நெருக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமது கட்சியே யார் பிரதமர் எனத் தீர்மானிக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.


2009 மே மாதத்தில் மாதவ் குமார் 22 கட்சிக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கி பிரதமரானார். இராணுவத் தளபதியின் நியமனம் குறித்து அரசுத்தலைவர் ராம் பரன் யாதவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் மாவோயிசவாதிகளின் தலைமையிலான முன்னைய அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து நேபாள் பிரதமராக மாதவ்குமார் பதவியேற்றார்.


யார் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


புதிய அரசியலமைப்பை வரைவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டு காலம் நீடிக்க ஆளும் கூட்டணியும் மாவோயிசக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்த ஒரு மாத காலத்தில் பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு