நேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு
செவ்வாய், செப்டம்பர் 15, 2009, கத்மண்டு, நேபாளம்:
நேபாளத்தின் மிகப்பெரிய மதத்திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அந்நாட்டின் உணவுத் துறை அமைப்பினர், தலைநகர் காட்மாண்டுவில் மதச் சடங்குகளில் பலியிடுவதற்காக கிராமப்புறங்களில் இருந்து ஆடுகளை வாங்கிவரும்படி தமது பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நேபாளத்தில் இந்து பண்டிகையில் ஆடு பலி கொடுப்பது வழக்கம். நவராத்திரி பண்டிகையின் போது, சக்திக்கான இந்துக் கடவுள் துர்கையை திருப்தி செய்யும் முகமாக பாரம்பரிய ரீதியில் பலி கொடுக்க, நகரங்களில் போதுமான ஆடுகள் இல்லாத நிலையில் கிராமப்புறங்களில் இருந்து ஆடுகளை வாங்கிவர உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆடு வளர்ப்பவர்கள் தங்களது ஆடுகளை விற்க வலியுறுத்தி வானொலி மூலமாக பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பத்து நாட்கள் கொண்டாப்படும் நவராத்திரி திருவிழா இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.
பண்டிகை காலத்தில் ஆட்டு இறைச்சிக்கு ஏற்படும் பெருமளவிலான தேவையை சமாளிக்கும் வகையிலும், அவற்றின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதை கட்டுபடுத்தவே இவ்வாறான ஒரு பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைப்பினர் கூறுகிறார்கள்.
மூலம்
தொகு- Nepal hit by severe goat shortage, பிபிசி
- Nepal runs out of goats to sacrifice, டெலிகிராப்
- Nepal's capital suffers festival goat shortage, ஏஎஃப்பி