நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு

சனி, ஏப்பிரல் 25, 2015

நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் உண்டான நிலநடுக்கத்தால் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.


7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து பதினாறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் ஒன்று 4.5 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் பூமியின் மேல் பாதிப்பு அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.


நிலநடுக்கம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் லாம்சங் என்ற இடத்தில் காலை 11.56க்கு முதலில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் பீகார், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், சிக்கிம் போன்ற பல வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. பாக்கித்தான், சீனா, வங்காள தேசம், பூடான் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.


பல பழமையான கட்டடங்களும் கோவில்களும் இடிந்தாலும் காத்மாண்டுவில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டு பசுபதி நாத் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.


பீகாரில் 32 பேரும் உத்திரப்பிரதேசத்தில் 8 பேரும் மேற்கு வங்காளத்தில் 3 பேரும் உயிரழந்துள்ளனர். நிலநடுக்கம் உருவாக்கிய பனிச்சறிவினால் எவரெசுட் அடிவார முகாமில் 18 பேர் உயிரிழந்தனர்.




மூலம் தொகு