மாலியில் இராணுவத்தினருடனான மோதலில் 45 போராளிகள் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, சனவரி 20, 2012

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுப் படைகளுடன் இடம்பெற்ற இரண்டு நாள் கடுமையான மோதல்களில் குறைந்தது 45 துவாரெக் போராளிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் இராணுவத் தரப்பு தெரிவித்திருக்கிரது.


மாலியின் வடக்கே உள்ள பெரும் பாலைவனப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். மோதல்களில் போராளிகளின் பல வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும், டெசாலிட், அகுவெல் ஹொக் உட்பட மூன்று நகரங்களைத் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. போராளிகளில் சிலர் லிபியாவில் முன்னாள் தலைவர் முவம்மர் கடாபியின் படைகளில் இணைந்து போராடிப் பின்னர் நாடு திரும்பியவர்கள் ஆவர். புதிதாக உருவாக்கப்பட்ட அசவாட் விடுதலைக்கான தேசிய முன்னணி என்ற குழுவின் உறுப்பினர்களே இவர்கள் என அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


இப்பிராந்தியத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த அமைதி இவ்வார மோதல்களினால் முடிவுக்கு வந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


துவாரெக் மக்கள் தெற்கு அரசாங்கத்தால் புறந்தள்ளப்படுவதாகக் கூறி கடந்த பல ஆண்டுகளாக மாலியின் வடக்கே அசவாத் பகுதியில் சுயாட்சி கோரிப் போராடி வருகிறார்கள். இவர்கள் வடக்கு மாலி, வடக்கு நைஜர், மற்றும் தெற்கு அல்ஜீரியா பகுதிகளில் வாழும் நாடோடி இன மக்கள் ஆவர்.


மூலம்

தொகு