துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு

புதன், சூன் 19, 2013

அடுத்த மாதமளவில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக துவாரெக் போராளிகளுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது.


உடனடிப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசுப் படையினர் போராளிகள் வசமுள்ள கிடால் நகருக்கு மீண்டும் வர இவ்வமைதை உடன்பாடு வழிவகுக்கிறது. கடந்த பெப்ரவரியில் பிரெஞ்சுப் படையினர் வெளியேறியதை அடுத்து கிடால் நகரை போராளிகள் மீண்டும் கைப்பற்றித் தம் வசம் வைத்துள்ளனர்.


1960 இல் மாலி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற நாளில் இருந்து துவாரெக்குகள் அதிக சுயாட்சி கோரிப் போராடி வருகின்றனர்.


வட அயர்லாந்தில் தற்போது இடம்பெற்று வரும் ஜி8 நாடுகளின் உச்சிமாநாட்டின் போது பிரான்சின் அரசுத்தலைவர் பிரான்சுவா ஒலாண்டே இந்த அமைதி உடன்பாடு பற்றி அறிவித்தார்.


இந்த உடன்பாட்டில் துவாரெக் போராளிகளின் முக்கிய அமைப்பான அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் (MNLA) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. 2012 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் அல்-கைதா தொடர்பு இசுலாமியப் போராளிக் குழுக்களுடன் இணைந்து மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றியது. ஆனாலும், இக்கூட்டணி நீடிக்கவில்லை. இசுலாமியத் தீவிரவாதிகள் துவாரெக்குகளை ஒதுக்கி விட்டு வடக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் பிரான்சியப் படையினர் மாலியின் வடக்குப் பகுதியினுள் நுழைந்து அப்பகுதியை இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டனர்.


புர்க்கினா பாசோ தலைநகரில் அந்நாட்டின் தலைவர் பிளைசி கொம்பாரோ தலைமையில் இந்த அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாடு குறித்து துவாரெக் போராளிக் குழ்வின் பேச்சாளர் மூசா அக் அத்தாகர் உறுதிப்படுத்தினார். துவாரெக்குகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ளனர். பதிலாக தாம் வாழும் பகுதிகளில் அதிக சுயாட்சியை அவர்கள் பெற்றுக் கொள்வர்.


சூலை 28 இல் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன. தேர்தலை ஒட்டி நாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த 12,600 அமைதிப்படையினரை ஐக்கிய நாடுகள் அங்கு அனுப்பவுள்ளது.


மூலம் தொகு