மலேசிய இந்தியக் காங்கிரசின் புதிய தலைவராக பழனிவேலு தெரிவு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், திசம்பர் 6, 2010

மலேசியாவின் மிகப் பழைமைவாய்ந்த இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய இந்தியக் காங்கிரசு (ம.இ.கா) கட்சி 31 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக புதிய தலைவரைத் தெரிவு செய்துள்ளது. 31 ஆண்டுகளாக இக்கட்சியின் தலைவராக இருந்த சாமிவேலு பதவி விலகியதை அடுத்து கோவிந்தசாமி பழனிவேல் (வயது 61) புதிய தலைவராக இன்று பொறுப்பேற்றார்.


படிமம்:G.Palanivel.gif
டத்தோசிறீ ஜி.பழனிவேல்

துணைத் தலைவர் ஜி. பழனிவேல் 64 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கட்சியின் எட்டாவது தலைவராக பதவி ஏற்றார்.


சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் மலேசிய சோசலிச கட்சியின் வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜிடம் தோல்வியுற்ற பின்னர், சாமிவேலு பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் வேகமடைந்தது. இன்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் தமது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.


ச.சாமிவேலுவிடமிருந்து பதவி ஏற்கும் பழனிவேல், மஇகாவின் மூன்றாண்டிற்கான தலைவர் பதவி தேர்தலை 2012 ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சந்திக்க வேண்டும். டத்தோஸ்ரீ சாமிவேலுவிடம் அணுக்கமாகவும் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் விளங்கியவர் டத்தோ ஜி. பழனிவேல்.


மலேசிய இந்திய காங்கிரசின் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் சாமிவேலு தெற்காசிய நாடுகளுக்கான விசேட தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். தெற்காசிய தலைவர்களுடனான தனது நீண்டகாலத் தொடர்பாடல்களின் மூலம் அவர் சிறப்பாகச் செயல்பட முடியும் என அரசாங்கம் கருதுகிறது.


மலேசியாவின் 21 இலட்சம் இந்திய வம்சாவளியினரைப் பாரம்பரியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளது. அத்துடன் பிரதமர் ரசாக்கின் ஆளும் கூட்டணியில் பிரதான பங்காளியாக இக்கட்சி உள்ளது. மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் சிறிய தொகையாக ஒப்பீட்டளவில் காணப்பட்டாலும் சில தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி கொண்டதாக இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் காணப்படுகின்றன.


1946 இல் அமைக்கப்பட்ட இக்கட்சியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியாகும்.


மூலம்

தொகு