மலேசியாவில் தொங்கு பாலம் விழுந்து மாணவி இறப்பு

புதன், அக்டோபர் 28, 2009, கோலாலம்பூர்:


மலேசியாவில் கம்பார் ஆற்றுக்கு குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட தொங்கு பாலம் ஒன்று சரிந்து விழுந்தபோது 11 வயது தீனா தேவி நாதன் என்ற மாணவி ஆற்றில் மூழ்கி இறந்தார். இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.


திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பேராக் மாநிலத்தில் பள்ளி முகாமில் பங்குகொண்ட மாணவர்கள் கம்பாருக்கு அருகில் உள்ள கோலா டிபாங் தேசியப் பள்ளிக் கூடத்திற்கு அந்தப் பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயர நிகழ்வு நிகழ்ந்தது.


பாலம் சரிந்து விழுந்தபோது அந்த பாலத்தைக் கடந்த 22 மாணவர்களும் ஆற்றில் விழுந்தனர். அவர்களில் பலர் தொங்கு பாலத்தின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினர். சில மாணவர்களை ஓர் ஆசிரியரும் பள்ளிக்கூட காவலாளியும் ஆற்றிலிருந்து மீட்டனர். தேவதர்சினி (11), திவ்யாஸ்ரீ (11) ஆகிய மாணவிகளே காணாமல் போனவர்கள்.


இந்தச் சம்பவத்தின் போது ஆற்றின் சுழற்சி கடுமையாக இருந்தது. ஆற்று நீரில் மூழ்கி இறந்த மாணவியின் சடலத்தை நேற்று காலை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாக பேராக் போலிஸ் படைத் துணைத் தலைவர் சாக்காரியா யூசோப் கூறினார்.


‘ஒரே மலேசியா முகாமில்’ பங்குகொள்ள கம்பார், பத்து காஜா பகுதிகளில் உள்ள 60 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் சென்றிருந்தனர். அந்த முகாமில் 23 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


ஆற்றில் விழுந்த மாணவர்களில் 8 பேரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக ஆசிரியர் முகம்மது சஃப்ரி அப்துல் ரபார் கூறினார். உலோகக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருந்த ஒரு மாணவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஆற்று நீரில் அந்த மாணவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அந்த ஆசிரியர் கூறினார். அந்த புதிய பாலம் இரண்டு வாரத்திற்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டதாக மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்