மலேசியப் பொதுத் தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் நடைபெறலாம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 3, 2013

ஏறக்குறைய ஓர் ஆண்டு காலமாக மலேசியர்களை ஊகிக்க வைத்த பிரதமர் நஜீப் அப்துல் ரசாக், இன்று காலை பேரரசரைச் சந்தித்த பின்னர், தொலைக்காட்சியின் வழி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.


அடுத்த கட்டமாக, மலேசியத் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான நாளை நிர்ணயம் செய்யும். நாடளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, மே மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்பது பலருடைய அனுமானம். ஆனாலும் இம்மாத இறுதியிலேயே நடைபெறலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் 222 இடங்களுக்கும், மாநிலங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன.


2009, ஏப்ரல் 3-இல், அப்துல்லா அகமது படாவியிடம் இருந்து நஜிப், பிரதமர் பதவியை ஏற்றார். இன்றுடன் சரியாக நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பிரதமர் என்ற முறையில் அவர் சந்திக்கப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். 2008-இல் அப்துல்லாவின் தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, பினாங்கு, கெடா, சிலாங்கூர், கிளாந்தான், திராங்கானு ஐந்து மாநிலங்களை இழந்து மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.


நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் தன் பிடியில் வைத்திருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் அக்கூட்டணி பறிகொடுத்தது. 222 இடங்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல் கூட்டணியிடம் இருப்பவை 137 இடங்கள். பாக்காத்தான் ராக்யாட் என்று அழைக்கப்படும் மக்கள் கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது. சுயேட்சைகள் மற்ற பத்து இடங்களைக் கைப்பற்றினர்.


இந்த முறை பாரிசான் நேசனல் கூட்டணியை ஆட்சியில் இருந்து இறக்கி அன்வார் இப்ராஹிமைப் பிரதமராக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு வலுவான அணி நஜிப்புக்கு எதிராக திரண்டிருப்பதாய்க் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். கடைசியாக நடைபெற்ற 2008 தேர்தலுக்குப் பின்னர் மூன்று மில்லியன் வாக்காளர்கள் புதிதாகப் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.


"இம்முறை பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமாயின் அது எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாகவே நடைபெறும்," என நஜீப் தனது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு