மன்னார் கடலில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராஜபக்ச அறிவிப்பு
திங்கள், அக்டோபர் 3, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெயிர்ன் இந்தியா என்ற நிறுவனமே இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை தனக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடற்படுகையில் 1354 மீற்றர் வரை ஆழம் வரை துளையிட்டதில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத்தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயிர்ன் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்கான உரிமை கெயிர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. சிக்யு எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெயிர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும்.
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பது பற்றிய தகவல்கள் கிடைத்ததையடுத்து, இந்திய மற்றும் சீன தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிபொருள் கிணறு தோண்டுவதற்கான அனுமதி இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி தமது பணிகளைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்
தொகு- மன்னார் கடற்பரப்பில் எரிவாயு, பிபிசி, அக்டோபர் 3, 2011
- Sri Lanka finds oil:Very favourable indications of presence of oil off Mannar - President, News lk, அக்டோபர் 2, 2011
- இலங்கை கடற்பரப்பில் எரிவாயு, தினகரன், அக்டோபர் 3, 2011
- இலங்கை எதிர்காலத்தில் செல்வந்த நாடாக மாறும்: ஜனாதிபதி, வீரகேசரி, அக்டோபர் 2, 2011
- மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு கண்டுபிடிப்பு; கெய்ர்ன் நிறுவனம் அறிவிப்பு, டெய்லிமிரர், அக்டோபர் 2, 2011