மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை
வியாழன், பெப்பிரவரி 13, 2014
- 13 பெப்பிரவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை
- 20 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு
- 12 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்
- 8 திசம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்
- 21 நவம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை
முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் கிறித்தவ இராணுவக் குழுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கத் தயங்க மாட்டேன் என மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் கேத்தரின் சாம்பா-பான்சா அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் கிறித்தவ இராணுவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கேமரூன், மற்றும் சாட் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர் உள்ளூரிலேயே ஐநா முகாம்களில் வசித்து வருகின்றனர்.
நாட்டில் தற்போது இனவழிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது. ஆனாலும், இக்கூற்றை மறுத்துள்ள அரசுத்தலைவர் நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகள் "பாதுகாப்புப் பிரச்சினை" மட்டுமே எனக் கூறியுள்ளார்..
"நான் ஒரு பெண் என்பதால் என்னை அவர்கள் பலவீனமானவள் என நினைத்து விட்டனர். படுகொலைகளில் ஈடுபடும் அனைவரும் வேட்டையாடப்படுவர்," என அவர் தனது உரையில் கூறியுள்ளார்.
நாட்டில் இருந்து வெளியேறிய பெரும்பாலான முஸ்லிம்கள் உணவு வணிகர்கள் ஆவர். இதனால், நாட்டில் தற்போது உணவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுகிறது என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முஸ்லிம் செலெக்கா போராளிகள் வன்முறைகளில் ஈடுபட்டு அரசைக் கவிழ்த்து தமது தலைவர் ஜொட்டோடியா என்பவரை இடைக்கால அரசுத்தலைவராக நியமித்தனர். கடந்த மாதம் இடம்பெற்ற இனமோதல்களை அடுத்து அவர் தமது பதவியைத் துறந்தார். கேத்தரின் சாம்பா-பான்சா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் வன்முறைகள் தொடர்ந்தன. பெருமளவு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு தலைநகரில் வீதிகளில் போட்டு எரிக்கப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் 50% கிறித்தவர்களும், 15% முஸ்லிம்களும் உள்ளனர். ஏனையோர் பழங்குடி இனத்தவர் ஆவர். தங்கம், வைரம், மற்றும் இயற்கைக் கனிம வளங்கள் கொண்ட இந்நாட்டில் பல்லாண்டு காலமாக இடம்பெற்று வரும் இனமோதல்களினால் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள்.
மூலம்
தொகு- CAR President Samba-Panza 'declares war' on militias, பிபிசி, பெப்ரவரி 12, 2014
- Muslim exodus in Central African Republic revives ethnic cleansing fears, கார்டியன், பெப்ரவரி 13, 2014