மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: தலைநகரைக் கைப்பற்றிய போராளிகள் நாடாளுமன்றத்தைக் கலைத்தனர்
செவ்வாய், மார்ச்சு 26, 2013
- 13 பெப்பிரவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை
- 20 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு
- 12 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்
- 8 திசம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்
- 21 நவம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரைக் கைப்பற்றிய போராளிகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
செலேக்கா போராளிக் குழுவின் தலைவர் மைக்கேல் ஜொத்தோடியா நியாயமான தேர்தல்கள் இன்னும் மூன்றாண்டுகளில் இடம்பெறும்வரை நாட்டை தமது தலைமையில் ஓர் இடைக்கால அரசு நிர்வகிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கமரூன் நாட்டிற்குள் சென்றுள்ளார் என கமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்றுள்ள ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து ஆப்பிரிக்க ஒன்றியம் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசை தனது அமைப்பில் இருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், போராளித் தலைவர்களுகு எதிராக பல தடைகளையும் அறிவித்துள்ளது.
அரசுடன் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாட்டை அதிபர் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 5,000 செலேக்கா போராளிகள் தலைநகர் பாங்குயி நகருக்குள் ஊடுருவினர்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சண்டைகளில் அரசுப் படைகளுக்கு உதவிக்குச் சென்ற தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 13 படையினர் கொல்லப்பட்டனர் என தென்னாப்பிரிக்கத் தலைவர் யாக்கோபு சூமா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இந்தியக் குடிமக்கள் இருவர் அங்கு நிலை கொண்டுள்ள பிரெஞ்சுப் படையினரால் நேற்று திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என பிரான்சின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆஅறு பேர் காயமடைந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொங்கோ, கமரூன் ஆகிய அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.
மூலம்
தொகு- CAR rebel head Michel Djotodia 'suspends constitution', பிபிசி, மார்ச் 26, 2013
- French soldiers kill two Indian nationals in CAR, பிபிசி, மார்ச் 26, 2013
- French troops kill 2 Indians in Central African Republic, தி இந்து, மார்ச் 26, 2013