மடகஸ்காரில் ஓராண்டுக்குள் தேர்தல் நடத்த உடன்பாடு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, செப்டெம்பர் 18, 2011

மடகஸ்காரில் ஓராண்டுக்குள் தேர்தல்களை நடத்தி மக்களாட்சியைக் கொண்டுவரும் உடன்பாடு ஒன்று அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் மட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.


இவ்வுடன்பாட்டின் படி நாடு கடந்த நிலையில் வாழும் முன்னாள் அரசுத்தலைவர் மார்க் ரவலொமனானா நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து தற்போதைய அரசுத் தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினா இராணுவத்தினரின் உதவியுடன் மார்க் ரவலொமனானாவின் ஆட்சியைக் கவித்து பதவிக்கு வந்தார்.


தென்னாப்பிரிக்க அபிவிருத்தி சமூகம் இவ்வுடன்பாட்டுக்கு மத்தியத்தம் வகித்திருந்தது. 2009 ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து மடகஸ்கார் இச்சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பல நாடுகளும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்தும் மடகஸ்கார் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்காவின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் மரியசு பிரான்சுமன் தலைமையில் மடகஸ்கார் தலைநகர் அண்டனனரீவோ நகரில் சமாதான உடன்பாடு கையெழுத்தானது. ஆண்ட்ரி ராசொய்லினா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் இடம்பெறும் வரையில் வரையில் பதவியில் இருப்பார்.


மார்க் ரவலொமனானா தற்போது தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.


மூலம்

தொகு