மகாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்காவில் கரைக்கப்படுகிறது

வெள்ளி, சனவரி 29, 2010


இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் சனிக்கிழமை அன்று கரைக்கப்படவிருக்கிறது.


1940களில் மகாத்மா காந்தி

வீலாஸ் மேஹ்டா என்ற காந்தியின் குடும்ப நண்பர் ஒருவர் பல ஆண்டுகாலமாக இந்த அஸ்தியைப் பாதுகாத்து வைத்திருந்ததாக காந்தியின் பேத்தி எலா காந்தி பிபிசி செய்தியாளருக்குக் கூறினார். சென்ற ஆண்டு இது காந்தியின் குடும்பத்துக்கு இது கையளிக்கப்பட்டது.


62 ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது அஸ்தியின் பகுதிகள் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது ஆதர்வாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.


குடும்ப அங்கத்தவர்களும் நண்பர்களுமாக 200 பேர் தென்னாப்பிரிக்கக் கடற்படையினருடன் இணைந்து டேர்பன் நகரில் உள்ள கடற்கரையில் இவ்வஸ்தியைக் கரைப்பார்கள் என டேர்பன் நகரில் வசிக்கும் எலா காந்தி தெரிவித்தார்.


1948 ஆம் ஆண்டில் காந்தியின் மறைவுக்குப் பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகள், நதிகளில் கரைக்கப்பட்டன. இருப்பினும் சில அஸ்திக் கலசங்களை கரைக்காமல் அவரது தீவிர ஆதரவாளர்கள், நண்பர்கள் தங்களுடன் வைத்துக் கொண்டனர். இவ்வாறு எத்தனை பேர் அஸ்தியைப் பெற்றார்கள் என அறிவது கடினம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அப்படி ஒரு அஸ்திக் கலசம் 1997ம் ஆண்டு புவனேஸ்வர் வங்கி ஒன்றின் லாக்கரில் இருந்தது. பின்னர் அது அலகாபாத்தில் கரைக்கப்பட்டது. இன்னொரு கலசம் மணி பவனில் இருந்தது. இதை பிரபல தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜின் பேரன் பரத் நாராயணன் என்பவர் மணி பவனில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடைசியாக 2008 ஆம் ஆண்டில் காந்தியின் மகன் ஒருவரால் மும்பை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்ட அஸ்திக் கலசம் ஒன்று அரபிக் கடலில் கரைக்கப்பட்டது.


மகாத்மா காந்தி 1948, ஜனவரி 30ஆம் நாள் இந்து தீவிரவாதி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


21 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் தங்கி வழக்கறிஞராகப் பணியாற்றியிருந்தார்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்