நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், திசம்பர் 11, 2013

தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு நேற்று 90 இற்கும் அதிகமான உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்க மக்களின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


ஜொகான்னர்சுபர்க்கில் அமைந்துள்ள கால்பந்து அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன், கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ உட்படப் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வு காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய பன்னாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது


தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவரான மண்டேலா கடந்த வியாழக்கிழமை தனது 95 ஆவது வயதில் காலமானார். இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.


நெல்சன் மண்டேலாவின் உடலடங்கிய பெட்டி இந்த விளையாட்டரங்கில் வைக்கப்படவில்லை. அவரது உடல் அரச மரியாதைக்காக பிரிட்டோரியாவில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். நேற்றைய நிகழ்வில் மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.


இந்நிகழ்வில் உரையாற்றிய பராக் ஒபாமா, மண்டேலாவை மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்நிகழ்வில் உரையாற்றினார். இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவும் கலந்து கொண்டார்.


நேற்றைய நிகழ்வில் தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, பிரேசில் சனாதிபதி டில்மா ருசொவ், சீன துணை சனாதிபதி லீ யுவன்சோ ஆகியோரும் உரையாற்றினர். கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ உரை நிகழ்த்த வந்திருந்த போது அரங்கம் எங்கும் மக்கள் ஆரவாரமாகக் கைதட்டி வரவேற்றனர்.


மூலம்

தொகு