போர்னியோவில் பிலிப்பீனிய ஆயுதக் கும்பல் மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது

செவ்வாய், மார்ச்சு 5, 2013

மலேசியாவின் போர்னியோ தீவில் ஊடுருவியுள்ள பிலிப்பீனிய ஆயுதக் குழு மீது மலேசிய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது.


லகாட் டத்து மாகாணத்தில் போர் விமானங்கள், மற்றும் உலங்கு வானூர்திகளின் உதவியுடன் தரைப்படையினர் தாக்குதலை நேற்றுக் காலையில் ஆரம்பித்தனர். அங்கு கிட்டத்தட்ட 180 ஆயுததாரிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர்க் காவல்துறையினருக்கு உதவியாக ஏழு இராணுவப் பிரிவுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.


பாதுகாப்பு படையின் தாக்குதல் தமது இலக்கை அடைந்துள்ளதாக காவல்துறைத் தலைவர் இசுமைல் ஒமார் தெரிவித்துள்ளார். படைத்தரப்பில் இதுவரை எந்தவொரு உயிருடற்சேதமும் இல்லை எனவும் அவர் கூறினார்.


இப்பகுதி தமக்கே சொந்தம் என 19 ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் காட்டுவதாக பிலிப்பீனோக்கள் கூறுகின்றனர். "சூலு அரசுப் படை" எனக் கூறிக் கொள்ளும் இந்த முஸ்லிம் ஆயுதக் குழு கடந்த பெப்ரவரி முதல் லகாத் டத்து மாவட்டக் கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசம் வைத்துள்ளனர். சூலு சுல்தானாகத் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்ட மூன்றாம் ஜமாலுல் கிராம் என்பவரின் இளைய சகோதரரான அக்பிமுதின் கிராமின் தலைமையில் சுமார் நூறு பேர் கொண்ட ஆயுதக் கும்பலொன்று தற்போது லகாத் டத்து மாவட்டத்தை ஊடுருவியுள்ளது.


கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகளில் எட்டு மலேசியக் காவல்துறையினரும், 19 ஆயுதக் குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர்.


போர்னியோவின் சபா மாநிலத்தின் கிழக்­குக் கரை­யோ­ரப் பகு­தி­யில் நடை­பெற்று வரும் தாக்­கு­தல்­களை அடுத்து, அப்­ப­கு­தி­யில் பதற்றநிலை நீடிக்கிறது. சூலு போராட்டக்காரர்களை அடியோடு ஒழிப்போம் என மலேசியப் பிரதமர் நஜிப் சூளுரைத்திருக்கிறார். பிலிப்­பீன்சு நாட்டின் தென் பகு­தி­களுக்கு அருகிலுள்ள சபாவின் லாகாட் டத்­து, செம்­பூர்னா பகுதிகளில் அச்சமடைந்துள்ள மக்கள் அப்­ப­குதிகளை விட்டு கூட்டம் கூட்­ட­மாக வெளி­யே­றி வருகின்றனர்.


பிலிப்பைன்சு நாட்டவர்கள் அந்நாட்டிலுள்ள மலேசிய தூதரகம் முன்பு கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் கோரினர். இதனை அடுத்து தலைநகர் மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது.


சூலு சுல்தானகம் ஒரு காலத்தில் (1457-1917) பிலிப்பீன்சின் பெரும்பாலான தெற்குத் தீவுகள், மற்றும் போர்னியோ ஆகிய இடங்களில் பரவியிருந்தது. இவர்கள் சபாவைத் தமது பகுதியாக அறிவித்திருந்தன. சபா பின்னர் 1800களில் பிரித்தானியாவின் காப்பு நாடாக அறிவிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் சபா மலேசியாவுடன் இணைக்கப்பட்டது. சூலு சுல்தானகத்திற்கு மலேசியா இப்போதும் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை குத்தகையாகக் கொடுத்து வருகிறது. சபாவின் உண்மையான உரிமையாளராகத் தம்மை அறிவிக்குமாறு சூலு அரசுப் படை கோரி வருகிறது. அத்துடன் பழைய குத்தகை உரிமையை மீள் பரிசீலனைக்கு விடுமாறும் அது கேட்டு வருகின்றது. இக்கோரிக்கையை ஏற்க மலேசியா மறுத்து வருகிறது.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு