பொதுநலவாய போட்டிகளின் கிராமத்தைச் சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி மீது குற்றச்சாட்டு

This is the stable version, checked on 23 அக்டோபர் 2010. Template changes await review.

வெள்ளி, அக்டோபர் 15, 2010

தில்லியில் நடைபெற்று முடிந்த பொதுநலவாயப் போட்டிகளின் கிராமத்தில் இருந்த கோபுரத்தை ஆத்திரேலிய அணி வீரர்கள் சேதப்படுத்தியதாக் அஎழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.


ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி கடந்த புதனன்று இந்திய அணியிடம் படு தோல்வியச் சந்தித்ததை அடுத்து பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபற்ற வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆத்திரமடைந்து அவர்கள் தங்கியிருந்த கிராமத்தை சேதப்படுத்தியதாக இந்திய ஊடகங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டிருந்தது.


அறைகளில் இருந்த தளபாடங்கள், மின்னுபகரணங்களை சேதப்படுத்தியதாகவும், துணி துவைக்கும் மின்பொறியை எட்டாவது மாடியில் இருந்து கீழே எறிந்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


துணி துவைக்கும் மின்பொறி சேதமடைந்ததை ஒப்புக்கொண்டிருக்கும் ஆத்திரேலியத் தூதரகம், தமது வீரர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.


"வீட்டுப் பணியாளர்கள் ஆத்திரேலிய வீரர்களின் கூத்தைத் தடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் முடியவில்லை," என டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தெரிவித்துள்ளது. அவர்கள் சச்சின் தெடுல்க்காருக்கெதிராகக் கூச்ச்லிட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.


ஆத்திரேலிய தூதரகம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "ஆஸ்திரேலிய அணியினரும், வேறு பல அணியினரும் அங்கு வேடிக்கையாகக் கொண்டாடினர்,” எனத் தெரிவித்துள்ளது. துணி துவைக்கும் மின்பொறி சேதமடைந்தது உண்மை எனவும், ஆனால் அதனை சேதப்படுத்தியது யார் என்பது நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் குறித்து தில்லிக் காவல்துறைக்கும், விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும், அவர்கள் இதனைக் கண்டு கொள்ளவில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.


நேற்று நடந்து முடிந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா 74 தங்கங்களுடன் முதலாம் இடத்தையும், இந்திய அணி 38 தங்கப்பதக்கம், 27 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்து அணி, 37 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.


நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக, இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை மேற்கொள்ள இருக்கிறது. மகிந்த சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


மூலம்