பெரியார் பல்கலைக்கழகத்தில் மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை பயிலரங்கம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், மார்ச்சு 31, 2015

மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கினை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறையுடன் இணைந்து மார்ச்சு 31, 2015 செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்த்த உள்ளது.

இப்பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள ஆட்சிப்பேரவைக் கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிகழ உள்ளது. இப்பயிலரங்கின் வரவேற்புரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சா வழங்க உள்ளார், தலைமையுரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சுவாமிநாதன் வழங்க உள்ளார், பயிலரங்க வாழ்த்துரையினை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் வை. நடராஜன் வழங்க உள்ளார், பயிலரங்கின் நோக்கவுரையை இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி வழங்க உள்ளார், நிகழ்வின் நன்றியுரையை முனைவர் எ. சி கவிதா வழங்க உள்ளார்.

இப்பயிலரங்கின் பயிற்சிகள் இரண்டு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகம் அளிக்கப்பெறும். இவ்வமர்வில் தமிழ் உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பெறும்.

மதியம் நிகழவுள்ள இரண்டாம் அமர்வில் விக்கி பொதுவகத்தில் காட்சிக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியங்களை மின் ஆவணங்களாக (GLAM) மாற்றும் பயிற்சி , திறவூற்று மென்மங்கள், தமிழ் மென்மங்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பெறும். இப்பயிலரங்கில் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணவர்களும், மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமைப் பணிகளின் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர்.