புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது

செவ்வாய், நவம்பர் 26, 2013

கௌதம புத்தர் பிறந்த நேபாளத்தில் மிகப் பழைய புத்த கோவில் ஒன்றின் பகுதிகள் தொல்லியலாளர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய லும்பினி
புத்தர் பிறப்பு

நேபாளத்தில் லும்பினியில் மாயாதேவி கோவிலுக்கு அடியில் இருந்து கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தினாலான கோவிலை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்தக் கோவிலில் மரம் ஒன்றும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது புத்தரைப் பற்றிய கதை ஒன்றுடன் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. புத்தரின் தாயார் மாயாதேவி மரக்கிளை ஒன்றைப் பிடித்தவாறு புத்தரைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.


அனடிக்குவிட்டி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்கள் புத்தர் பிறந்த நாள் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் டர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபின் கொனிங்கம் என்பவர் தலைமையிலான குழு இவ்வாய்வில் ஈடுபட்டது.


புத்தர் பிறந்தது கிமு 623 ஆம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதாக நம்பப்பட்டு வந்தது. ஆனாலும், பெரும்பாலான வரலாற்றியலாளர்கள் கிமு 390-340 என நம்புகின்றனர்.


இதுவரை காலமும், புத்தரைப் பற்றிய ஆதாரங்கள் கிமு 3ஆம் நூற்றாண்டு பழமையானவையாகவே இருந்து வந்துள்ளன. இவை பெரும்பாலும் அசோக மன்னர் காலத்தவையாகும். புதிய கண்டுபிடிப்புகள் இப்புனித தலத்தை பாதுகாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.


புதிய கண்டுபிடிப்பு குறித்து சில தொல்லியலாளர்கள் எதிர்மாறான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த ஜூலியா ஷா, மரம் ஒன்று கட்டடத்தை சுற்றியுள்ளதாகக் கூறப்படுவது ஒரு ஊகமே எனக் கூறியுள்ளார். ஆனாலும் இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.


புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாளத்தின் தென் மேற்கில் தலைநகர் கத்மண்டுவில் இருந்து 300 கிமீ தூரத்தில் இந்திய எல்லைக்கருகில் அமைந்துள்ளது. இப்பகுதியை 1997 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவித்தது.


மூலம்

தொகு