புத்தகாயா மகாபோதி கோவிலில் குண்டுவெடிப்பு, இரு துறவிகள் காயம்
திங்கள், சூலை 8, 2013
- 14 ஆகத்து 2017: பீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு
- 28 அக்டோபர் 2013: பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள், 6 பேர் உயிரிழப்பு
- 19 ஆகத்து 2013: பீகாரில் தொடருந்துப் பாதையைக் கடக்க முயன்ற 37 பேர் விரைவு வண்டி மோதி உயிரிழப்பு
- 17 சூலை 2013: பீகாரில் பள்ளி உணவு உட்கொண்ட 22 மாணவர்கள் உயிரிழப்பு
- 8 சூலை 2013: புத்தகாயா மகாபோதி கோவிலில் குண்டுவெடிப்பு, இரு துறவிகள் காயம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பௌத்தர்களின் புனிதத் தலமான புத்த கயாவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் இரண்டு பௌத்த துறவிகள் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர். இக்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் பாட்னாவில் இருந்து 60 மைல் தூரத்தில் அமைந்துள்ள மகாபோதி கோயிலில் வரிசையாக ஒன்பது இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. கோயிலுக்குள் ஐந்து குண்டுகளும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று குண்டுகளும் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்றின் அடியில் ஒரு குண்டுமாக மொத்தம் ஒன்பது குண்டுகள் வெடித்தன. மேலும் இரு குண்டுகள் வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை 05:40 மணியளவில் சிறப்பு வழிபாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் முதலாவது வளாகத்தினுள் வெடித்தது. இதனை அடுத்து கூடியிருந்த பக்தர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து மேலும் குண்டுகள் துறவிகள் மடப் பகுதி உட்படப் பல இடங்களில் வெடித்தன. மியன்மாரைச் சேர்ந்த இரண்டு பௌத்த துறவிகள் காயமடைந்தனர்.
இக்குண்டுவெடிப்புகளினால் மகாபோதிக்கோ, புனித அரச மரத்திற்கோ சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த இயக்கமும் தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை. குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உயரதிகாரிகளுடன் உடனடியாக புத்தகாயா சென்றார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு வந்து வந்து வழிபடுகின்றனர். யுனெஸ்கோ இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் பௌத்தர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றன என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அண்மைக் காலங்களில் பர்மா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் முசுலிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே முறுகல் நிலை இருந்து வருகிறது.
மூலம்
தொகு- Bodh Gaya: Man detained for India Buddhist shrine blasts, பிபிசி, சூலை 8, 2013
- Terror strikes Bodh Gaya, two monks injured, த இந்து, சூலை 7, 2013