பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, ஏப்பிரல் 18, 2010

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (வயது 80), வெள்ளி்க்கிழமை இரவு மலேசியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.


இலங்கையில் 2009 மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின் பின்னர், பிரபாகரனின் பெற்றோர் முகாமில் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பில் இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமாகிவிடவே, தாயார் பார்வதி அம்மாள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மலேசியா சென்றிருந்தார்.


அங்கிருந்து மேல் சிகிச்சை பெறுவதற்காக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் 6 மாதகாலம் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி பெற்று வெள்ளிக்கிழமை இரவு 10:45 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது. எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


இதனையடுத்து அவர் மீண்டும் நள்ளிரவு நேரத்தில் அதே விமானத்தில் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.


சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரி ஜங்கிட் என்பவர் மேற்பார்வையிட்டார். பார்வதி அம்மாளைக் கூட்டிச் செல்வதற்காக அங்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 150 இற்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் குழுமியிருந்தனர்.


சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல், மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில், சென்னையில் வரும் 23-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.


இதற்கிடையில், அதே இரவு மலேசியா சென்றடைந்த பார்வதி அம்மாளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியதாக அவரது நலன்களைக் கவனிக்கும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


இரு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து சென்னை சென்ற திரு. சிவாஜிலிங்கம் அங்கு இறங்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

தொகு