பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐநா தீர்மானம்
புதன், செப்டெம்பர் 30, 2009
- இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு
- பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு
- சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கு நாடுகள் தயாராகின்றன
- ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம்
பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் பாலியல் வன்செயல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்று கடந்த வருடம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது, இந்தத் தீர்மானம் வந்துள்ளது.
ஏனைய பல கோரிக்கைகளுடன், இந்த தீர்மானம், உலக நாடுகளை இவை குறித்த சர்வதேச சட்டங்களுக்கு ஒத்த வகையில் தமது சட்டங்களை உருவாக்கவும், பாலியல் வன்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை புலன்விசாரணை செய்வதற்கான திறமைகளை பெறுவதற்கு ஏற்றவாறு சிப்பாய்களை ஆட்சேர்ப்புச் செய்து, பயிற்றுவிக்க வேண்டும் என்று கோருகிறது.
அமெரிக்க, இராஜாங்க செயலாளர் இலரி கிளிண்டன் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது, கடந்த ஜூலை மாதத்தில் தாம் கொங்கோ குடியரசுக்கு சென்றிருந்தபோது, அங்கு மாதம் ஒன்றுக்கு 1100 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக தகவல் வெளியானதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகினர். சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இந்தநிலையில் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஒரு ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்
தொகு- பிபிசி தமிழோசை
- "இலங்கை உட்பட்ட நாடுகளில் போரின்போது பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது". தமிழ்வின், அக்டோபர் 1, 2009
- "Rape was used as a weapon of war in Sri Lanka- Clinton". டெய்லிமிரர், செப்டம்பர் 30, 2009