ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம்
புதன், ஆகத்து 28, 2013
- 17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
- 25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- 7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- 24 செப்டெம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
இலங்கைக்கு ஏழு நாள் பயணமாக கடந்த ஞாயிறன்று இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு வடமாகாண ஆளுனர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் குடாநாட்டின் நிலைமைகளையும் அவதானித்துள்ளார்.
யாழ் பொது நூலகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் ஆளுனர், மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்தார்.
நவி பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுப்பிலுள்ளவர்களையும் விடுவிக்கக்கோரியும் நேற்று யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான காணாமல் போனோரின் உறவினர்கள் இன, மத, பேதமின்றி மூவின மக்களும் ஒன்றுதிரண்டு கலந்து கொண்டனர். இலங்கையில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களின் அமைப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஆகியன இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி கதறி அழுது கோஷங்களை எழுப்பினர். காணாமல்போன தமது பெற்றோரை மீட்டுத்தருமாறு குழந்தைகளும் சிறுவர்களும் தந்தையினதும் தாயினதும் படங்களை ஏந்தியவாறு அழுது புலம்பி கோஷங்களை எழுப்பினர்.
பொது நூலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபொழுது வடமாகாண ஆளுநரைச் சந்தித்த நவநீதம்பிள்ளையை இவ்வார்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குச் செல்லாது மாற்று வீதியூடாக அவ்விடத்தினைவிட்டுக் கூட்டிச் சென்றுள்ளனர்.
நூலகத்தை நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து விட்டனர்.
முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் கேப்பாப்பிலவு பகுதிகளுக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட நவநீதம்பிள்ளை அந்தப் பகுதி மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார். "காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது," என்று நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டதாக தமிழ்வின் இணையதள தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சூட்டுத் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்த பெருமளவு வாகனங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உயரமான வேலிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
தொகு- பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி, தமிழ்வின், ஆகத்து 28, 2013
- யாழ்ப்பாணத்தில் நவநீதம் பிள்ளை, பிபிசி, ஆகத்து 27, 2013
- நவனீதம்பிள்ளை கிளிநொச்சி, முல்லைத்தீவு விஜயம். இன்று இராணுவம் அற்ற பிரதேசமாக காட்சியளித்தது!, தமிழ்வின், ஆகத்து 27, 2013