சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கு நாடுகள் தயாராகின்றன
வியாழன், ஆகத்து 29, 2013
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 25 திசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 13 திசம்பர் 2016: அலெப்போ நகர் முழுவதும் சிரிய இராணுவம் வசமாகியது
- 14 மார்ச்சு 2016: சிரியாவிலிருந்து உருசிய படைகளில் பெரும் பகுதி விலகல் என உருசிய அதிபர் புதின் அறிவிப்பு
- 25 நவம்பர் 2015: உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது
பொது மக்கள் மீது வேதியியல் தாக்குதல் நடத்தியமையைக் கண்டிக்கும் முகமாக சிரியா மீது தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகவிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் அறிவித்துள்ளார். ஆனாலும், இது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா கூறியுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ள சிரியா, எவ்விதமான தாக்குதலையும் எதிர் கொள்ளத் தம் நாடு தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளது.
சிரியா மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலும் அவ்வட்டாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிரியாவின் நட்பு நாடுகளான உருசியா, ஈரான், மற்றும் சீனா ஆகியன எச்சரித்துள்ளன.
முன்னதாக கடந்த ஆகத்து 21 இல் நடைபெற்றதாகக் கூறப்படும் வேதித் தாக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு சிரியாவில் தமது விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தியது. இக்குழுவின் அறிக்கை சனிக்கிழமை அன்று தமக்குக் கிடைக்கும் என்றும் அதன் பின்னரே முடிவெடுக்கப்படும் என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் அறிவித்துள்ளார்.
சிரியப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஏனைய மேற்குலக நாடுகள் தமது அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றன. பொதுமக்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை அங்கீகாரம் தரவேண்டும் என பிரித்தானியா கேட்டுக் கொண்டுள்ளது. இராணுவத் தலையீடு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று கூடி ஆராயவுள்ளது.
இராணுவத் தலையீடு குறித்து பிரான்சும் ஆராய்ந்து வருகிறது. ஆனாலும், சிரியாவில் தலைதூக்கியுள்ள வன்முறைகளைத் தற்காலிகமாக நிறுத்தினால் அரசியல் தீர்வு சாத்தியமானது என பிரெஞ்சுத் தலைவர் பிரான்சுவா ஒலாண்டே கூறியுள்ளார்.
இதற்கிடையில், சிடியா மீது வான் தாக்குதல் நடத்தப்படுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என சீனாவின் அரசுப் பத்திரிகையான சைனா டெய்லி எழுதியுள்ளது. அதேப் போன்று, சிரியா மீதான இராணுவத் தலையீட்டைத் தாம் எதிர்க்கப்போவதாக உருசியாவும் அறிவித்துள்ளது. நடுநிலக் கடலின் கிழக்குப் பகுதிக்கு உருசியா தனது எதிர்-நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும், போர்க்க்கப்பல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
பிரித்தானியா தனது ஆறு போர் விமானங்களை சைப்பிரசு நாட்டுக்கு அனுப்பியுள்ளது. தமது தளங்களைப் பாதுகாக்கவே தாம் இவற்றை அனுப்பியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மூலம்
தொகு- Syria chemical weapons: UN's Ban Ki-Moon awaits report, பிபிசி, ஆகத்து 29, 2013
- UK Should Wait for Results of UN Probe in Syria - Russia, ரியா நோவஸ்தி, ஆகத்து 29, 2013