பாபர் மசூதி இடிப்பு - விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், நவம்பர் 25, 2009

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நிகழ்வு குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம் அளித்த அறிக்கை, நேற்று செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


படிமம்:Babri rearview.jpg
1992 இற்கு முன்னர் பாபர் மசூதியின் தோற்றம்

பாபர் மசூதி இடிப்பை நடத்தி முடித்து வகுப்பு கலவர நிலைக்கு நாட்டை கொண்டுசென்றதில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சங்க பரிவாரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று லிபரான் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.


அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.


இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது.


அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம்.

மூலம்

தொகு