பணிப்பெண் ரிசானா விவகாரம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, சனவரி 11, 2013


இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் அகமட் ஜவாத் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.


கொலைக்குற்றம் தொடர்பாக இலங்கைப் பெண் ரிசானா சவூதி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு புதனன்று இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக இரண்டு தடவைகள் கோரியிருந்தார். மேலும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியிருந்தனர். எனினும். இந்தக் கோரிக்கைளை இசுலாமிய சரியாச் சட்டத்தின் அடிப்படையில் நிராகரித்த சவூதி அரேபிய நீதிமன்றம் ரிசானாவிற்கான மரண தண்டனையை நிறைவேற்றியது.


இந்த நிலையில் சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவரை திரும்ப அழைத்துள்ளது.


இதற்கிடையில், ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடூரமானதும் மனிதத்தன்மை அற்றதுமான நடவடிக்கை என பிரித்தானியா கண்டித்துள்ளது. 'தலை வெட்டப்படுவது கொடூரமானதும் மனிதத் தன்மை அற்றதுமான நடவடிக்கையென நாம் கருதுகிறோம். அடிக்கடி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உட்பட மனித உரிமைகள் பற்றி எமது விசனத்தை சவூதி அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றோம்' என மத்திய கிழக்குக்கான வெளிநாட்டு அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


மூலம்

தொகு