படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்

சனி, திசம்பர் 5, 2009

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின் இராணுவ ஆட்சியாளர் கப்டன் மவுசா டாடிஸ் கமரா வியாழன் அன்று உதவியாளரொருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இந்நிகவில் கமரா படுகாயமடைந்துள்ளபோதும் அவரது உண்மையான நிலை தெரியவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஆனால், கமராவின் உயிருக்கு ஆபத்தில்லையெனத் தெரிவித்துள்ள தொடர்பாடல் அமைச்சர் கிட்ரிசா செரீப் இத் தாக்குதலின் பின்னணியில் அவரது உதவியாளர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மருத்துவ சிகிச்சைக்காக மொரொக்கோ வந்திருப்பதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


இந்த தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவரான அபுபக்கர் டியகைட் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.


இராணுவப் புரட்சி மூலம் கமரா கடந்த ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். இத் துப்பாக்கிச் சூட்டுச் நிகழ்வு இடம்பெற்றபோது கமரா இராணுவ முகாமொன்றில் இருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ள போதும் ஜனாதிபதி காவற் பிரிவின் முகாம் மற்றும் வானொலி நிலையத்திலேயே துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தலைநகர் கோனக்ரியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செப்டம்பரில் எதிரணியினரின் ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் பலியானதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கமரா கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இது குறித்த விசாரணைகளை கோனக்ரியில் ஐ.நா. அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மூலம் தொகு