கினி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்

செவ்வாய், செப்டம்பர் 29, 2009, கினி:


மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின் தலைநகர் கொனாக்ரியில் அரசாங்க எதிர்ப்பு கூட்டம் ஒன்றின் போது 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் விளையாட்டு அரங்கம் ஒன்றில் கூடியிருந்தபோது பாதுகாப்பு படைகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கொனாக்ரியிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 87 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் முன்னதாகத் தெரிவித்தனர். ஆனாலும் மருத்துவமனை வட்டாரங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவித்துள்ளது.


நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இராணுவ ஆட்சியாளர் கேப்டன் மூசா டாடிசு கமரா போட்டியிடுவதற்கு திட்டமிடுவதாகத் தெரிவதையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய எதிரணியினர் முயன்றிருந்தனர்.


கினியில் சூழல் மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம் தொகு