படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்
வியாழன், மே 16, 2013
- 9 ஏப்பிரல் 2015: உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு
- 6 சூன் 2014: கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது
- 17 ஏப்பிரல் 2014: பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை
- 16 மே 2013: படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்
- 22 ஏப்பிரல் 2013: பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது
டோலி என்ற செம்மறியாடு உருவாக்கப்பட்ட படியெடுப்பு முறையில் மாந்த முளையக் குருத்தணுக்களை (embryonic stem cells) ஒரு மனிதரின் தோல் உயிரணுக்களில் இருந்து உருவாக்கி உள்ளனர். ஒரேகான் தேசிய முதனி ஆய்வுகூடத்தில் (Oregon National Primate Research Center (ONPRC)) கரு மாற்றீடு எனும் பொறிமுறை மூலம் மருத்துவத்தின் புதியதொரு படிக்கல் நிலைநாட்டப்பட்டுள்ளது.
கருவணு பெருக்கமடையும் ஆரம்ப நான்கைந்து நாட்களுக்குள் உருவாகும்100 முதல் 150 வரை உயிரணுக்களைக் கொண்ட இளம்கருவளர் பருவ (blastocyst) முளையத்தின் உயிரணுக் கூட்டமே முளையக் குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) எனப்படும். முளைய குருத்தணுக்கள் எவ்வகையான இழையத்தையும் உருவாக்கும் தன்மை கொண்டவை . இதன் மூலம் புதிய இதயம், எலும்பு, ஈரல், நரம்பு இழையங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.
இதயத்தசை இறப்பினால் (மாரடைப்பு) பழுதுபட்ட இதயம் மிகவிரைவில் செயலிழப்புக்கு உள்ளாகின்றது. இறந்துபட்ட இழையங்களை ஈடு செய்ய புதிய உயிரணுக்கள் தேவை. அந்தக் குறிப்பிட நபரின் உயிரணுக்களே பழுதைச் சீர்படுத்த வல்லது. வேறொருவரின் உயிரணுக்கள் ஒவ்வாமையை உருவாக்கும். இச்சிக்கல் படியெடுப்பு முறை மூலம் நீங்குகின்றது.
இந்நிகழ்வில் ஒரு நபரில் இருந்து எடுக்கப்பட்ட தோல் உயிரணுக்களின் கருவில் உள்ள மரபணுக்கள் (டி.என்.ஏ), பெண் வழங்கி ஒருவரின் மரபணுக்கள் நீக்கப்பட்ட முட்டையுள் புகுத்தப்பட்டது. ஏற்கனவே இம்முறையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் 6 – 12 வரையிலான பருவத்தையே எட்டினர். ஆனால் ஒரேகனில் தற்போது நிகழ்த்திய ஆய்வில் 150 வரை உயிரணுக்களைக் கொண்ட இளம்கருவளர் பருவத்தை பெற்றுக்கொண்டனர். இது முழுமையான முளையக் குருத்தணுக்களை உருவாகத்தேவையான பருவமாகும்.
குருத்தணுக்கள் மருத்துவத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாக இருக்கும் இக்கால கட்டத்தில் இக்கண்டுபிடிப்பு சிறந்த விளைவுகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உயிரணுக்கள் மட்டுமே கொண்ட இம்முளையம் ஒரு மனிதனாக வளர்தெடுக்கப்படப் போவதில்லை, எனினும் இதற்குப் பல எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.
மூலம்
தொகு- Embryonic stem cells: Advance in medical human cloning, பிபிசி, மே 15, 2013
- In medical breakthrough, scientists convert human skin cells into embryonic stem cells, ஃபொக்சுநியூசு, மே 15, 2013