கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

வியாழன், செப்டம்பர் 3, 2009, இந்தியா:

கருநாடகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை


கூடு கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகை தவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய அறிவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.


இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும் மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக் கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர் தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய மாநிலங்களான கேரளம், மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக்காடுகளில் இவ்வகை தவளையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கேரளாவின் வயநாடு மற்றும் கருநாடகத்தின் குடகு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பலத்த ஆய்வின் பின்னர் இவை கண்டுபிடிக்கப்பட்டன.


12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று, பட்டுப்பூச்சிக் கூடு போன்ற கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு திரவப் பொருளை வெளிவிடுகின்றன.


"இவ்வகை மிகவும் அரிதான தவளைகள் ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று முனைவர் பிஜு பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண் தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன.


மூலம்

தொகு