படகு அகதிகள் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு இடமாற்றம்

செவ்வாய், சூன் 8, 2010


அண்மைக்காலமாக கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் வருகை அதிகரித்ததை அடுத்து அங்கிருந்த அகதிகள் சிலர் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நகரம் ஒன்றுக்கு இடமாற்றப்பட்டனர்.


1899 இல் லியனோரா நகரம்
மேற்கு ஆஸ்திரேலியா

பேர்த் நகரில் இருந்து 830 கிமீ வடகிழக்கே உள்ள லியனோரா என்ற தங்கம் அகழ்வெடுக்கும் பழமையான நகரம் ஒன்றுக்கு இவர்கள் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களின் அகதி விண்ணப்பங்கள் அதிகாரிகளினால் பரிசீலிக்கப்படும்.


21 குடும்பங்களைச் சேர்ந்த 86 அகதிகள் நேற்று இரண்டு விமானங்களில் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் இலங்கை, ஆப்கானித்தான், மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


லியனோரா நகரில் மொத்தம் 1200 பேர் நிரந்தரமாக வசிக்கின்றனர். இவர்களில் 400 பேர் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் ஆவர்.


புதிய வருகைக்காக மேலதிகமாக இங்கு சுகாதார மற்றும் கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. அகதிக் குடும்பங்கள் முகாம்களிலேயே தங்கியிருப்பர் எனவும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் மட்டுமே அவர்கள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவர்கள் உள்ளூர் பாடசாலைக்கு சென்று படிக்க அனுமதிக்கப்படுவர்.


அகதிகள் அனைவரும் இங்கு ஆகக்கூடியது 6 மாதங்கள் வரை இங்கு தங்கியிருப்பர் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

மூலம் தொகு