நேபாளத்தில் இரண்டு பேருந்து விபத்துகள், குறைந்தது 48 பேர் உயிரிழப்பு

திங்கள், சூலை 16, 2012

நேபாளத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஒரு பேருந்து விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இதே போன்றதொரு விபத்தில் 39 பேர் கொல்லப்பட்டனர்.


தலைநகர் கத்மண்டுவில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் பேருந்து பாதையில் இருந்து விலகி ஆற்றினுள் பாய்ந்துள்ளது. காணாமல் போனோரைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


நேற்றைய விபத்து நேபாளத்தின் தென்-மேற்கே பாராசி நகரில் இடம்பெற்றது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் பேருந்து தடம் புரண்டு கால்வாய் ஒன்றினுள் வீழ்ந்ததில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். பேருந்து அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், பலர் பேருந்தின் கூரை மேல் ஏறிச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.


கடந்த அக்டோபர் மாதத்தில் பேருந்து ஒன்று கிழக்கு நேபாளத்தில் மலைப் பாதை ஒன்றில் இருந்து தடம் புரண்டு ஆறு ஒன்றில் மூழ்கியதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு