நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார்

ஞாயிறு, மார்ச்சு 21, 2010

நேபாளத்தில் பத்து ஆண்டு கால உள்நாட்டுப் போரை முடிவுக் கொண்டுவந்த அமைதி உடன்படிக்கையை மத்தியத்தம் செய்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான கிரிஜா பிரசாத் கொய்ராலா தனது 86வது வயதில் கத்மண்டுவில் காலமானதாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது.


கி.பி.கொய்ராலா

நான்கு தடவைகள் நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்த கொய்ராலா, பல ஆண்டுகளாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.


அப்போது மன்னராக இருந்த ஞானேந்திராவின் அளவுக்கதிகமான அதிகாரங்களை அவரிடம் இருந்து அகற்றுவதற்காக கொய்ராலா அவர்கள் 2006 இல் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து செயற்பட்டார்.


இரு ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற மாவோயிஸ்டுகள் இந்து மன்னராட்சியை இல்லாது ஒழித்ததுடன், நேபாளத்தை மத சார்பற்ற குடியரசாக அறிவித்தார்கள்.


1940களின் இறுதியில் தொழிற்சங்கத் தலைவராக அரசியலில் நுழைந்தவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா. மன்னராட்சிக்கெதிரான அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக பல தடவைகள் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். 1960 இல் எட்டு ஆண்டுகள் சிறி வாசம் அனுபவித்தார்.


1991 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமரானார். மூன்று ஆண்டுகளில் அவரது ஆட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது.


2000 ஆம் ஆண்டில் மீண்டும் அவர் பிரதமரானார். அக்காலகட்டத்திலேயே மன்னர் பிரேந்திரா தனது மகனாலேயே கொல்லப்பட்டார்.


மே 2006 ஆம் ஆண்டில் மன்னர் ஆட்சி நாடாளுமன்றத்தினால் பறிக்கப்பட்டது. அதே ஆண்டில் மாவோயிசத் தீவிரவாதிகளுடன் அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மூலம்