நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது
வியாழன், பெப்பிரவரி 17, 2011
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கும் முயற்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை பெப்ரவரி 28 வரை காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களின் கைதைக் கண்டித்து தமிழகத்தில் திமுக பெரும் அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. சென்னை மைலாப்பூரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் பேரணியாக புறப்பட்டு இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது கனிமொழி கைது செய்யப்பட்டார். பல எதிர்க்கட்சித் தலைவர்களும் மீனவர் சிறைபிடிப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தலைநகர் தில்லியிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
கைது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "நாங்கள் மிக கவலைப்படுகிறோம், இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, சம்பவம் குறித்து இலங்கையுடன் பேசி அவர்களை விடுவிக்க ஆவன செய்யப்படும்," என்றார்.
இதற்கிடையில், தொண்டைமனாறு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 24 இந்திய மீனவர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் எல்லையினுள் பெரும் இழுவைக்கப்பல்களில் நுழையும் இந்திய மீனவர்கள் தமது கடல் வளங்களை சூறையாடிச் செல்வதுடன் வடபகுதி மீனவர்கள் வலைகளையும் சேதமாக்கிச் செல்வதாக நீண்டகாலமாக வடபகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த சனவரியில் இலங்கைக் கடற்படையினரால் இரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்தியா இலங்கை மீது குற்றம் சாட்டியிருந்தது. இதனையடுத்து இது குறித்துப் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சரை இந்தியா இலங்கைக்கு அவசர அவசரமாக அனுப்பியிருந்தது.
மூலம்
தொகு- Sri Lanka arrests Indian fishermen 'in its waters', பிபிசி, பெப்ரவரி 16, 2011
- Sri Lanka arrests over 100 Indian fishermen, யாஹூ, பெப்ரவரி 16, 2011
- More Indian fishermen in the net, சண்டே டைம்ஸ், பெப்ரவரி 17, 2011