நிலவு சுருங்கி வருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்

வெள்ளி, ஆகத்து 27, 2010



எமது நிலவின் மேற்பரப்பில் பிளவுகள் தோன்றி வருவதை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். நிலவின் உட்பகுதி குளிர்ந்து வருவதால் கடந்த பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக நிலவு சுருங்கிக் கொண்டு வருவதாக அவர்கள் கணக்கிட்டுள்ளனர். சயன்ஸ் அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


2006 ஆம் ஆண்டில் நிலவு

நிலவின் மேற்பரப்பில் பல செங்குத்தான நிலப்பரப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவையே நிலவு சிறிது சிறிதாகத் தேய்ந்து வருவதற்கான அறிகுறிகள் என அவர்கள் நம்புகின்றனர்.


பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


ஆனால் சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள், 14 புதிய பிளவுகளை கண்டறிந்துள்ளன. கடந்து சென்ற பில்லியன் ஆண்டுகளில் நிலவு 200 மிட்டர் அளவு சுருங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு உருவானது குறிப்பிடத்தக்கது. செங்குத்தான குன்றுகள் 1970களில் அப்பல்லோ திட்ட விண்கலன்களினால் கண்டறியப்பட்டன.


நிலவின் இந்த மாற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது என்றும், இது ஒரு தொடர் நிகழ்வு என்றும் கூறும் விஞ்ஞானிகள் இது பூமியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

மூலம்